

ஏழு மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்கள் விரைவில் நியமிக்கப் படுவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.
புதிய ஆளுநர்களின் பெயர் பட்டியலை எந்த நேரமும் மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் என கூறப் படுகிறது.
கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நியமிக் கப்பட்ட மாநில ஆளுநர்களை மாற்ற, நரேந்தர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றவுடன் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாநில ஆளுநர்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்.
இதன் பேரில் உத்தரப் பிரதேச ஆளுநர் பன்வாரி லால் ஜோஷி, சத்தீஸ்கரின் சேகர் தத் மற்றும் நாகாலாந்தின் அஸ்வினி குமார் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கர்நாடகாவின் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் மற்றும் திரிபுராவின் தேவானந்த் கொன்வார் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது.
இதையடுத்து மேற்கு வங்கத்தின் எம்.கே.நாராயணன் மற்றும் கோவாவின் பி.வி.வான்சூ ஆகிய ஆளுநர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். கடந்த ஆட்சியின்போது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்ததில் ஊழல் நடந்தது தொடர்பான வழக்கில் சாட்சிகளாக இவர்கள் இருவரி டமும் சிபிஐ விசாரணை நடத்தியது. இதையடுத்து இருவரும் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த ஏழு மாநிலங் களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களை புதிய ஆளுநர்களாக மத்திய அரசு எந்நேரமும் அறிவிக்க இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதுபற்றி ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘புதிய ஆளுநர்கள் பட்டியல் தயாராகி விட்டது.
இதில் உபி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கடைசி நேரத்தில் ஆளுநர் பதவியை ஏற்க மறுத்து விட்டதால் சற்று தாமதமாகிறது.
ஏற்கெனவே, மத்திய மனிதவளத்துறை முன்னாள் அமைச்சரும் கான்பூர் தொகுதி எம்பியுமான முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய நிதித்துறை முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஆளுநர் பொறுப்பை ஏற்க மறுத்து விட்டனர்.
இத்துடன் கேரளா ஆளுநர் ஷீலா தீட்சித் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது’’ என தெரிவித்தனர்.