

உச்ச நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து 10 நீதிபதிகள் நியமனத்துக்கு மத்திய அரசு பரிந்துரை அளித்துள்ளது. இதன்மூலம் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு சற்று தணிந்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த நீதிபதிகள் நியமனச் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, நீதிபதி களை நியமிக்கும் ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்துவதற்கான செயல்திட்டம் ஒன்றை உருவாக் கும்படி மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தை உருவாக்குவதில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத் துக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, ‘கொலீஜியம்’ முறைப்படி, நீதிபதி களை நியமிக்க அளிக்கப்பட்ட பரிந்துரைகள் மீது முடிவெடுக் காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வந்ததால், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், மத்திய அரசிடம் நிலுவையில் இருந்த நீதிபதிகள் நியமனத்துக்கான கோப்புகளுக்கு நேற்று அவசரமாக ஒப்புதல் அளிக் கப்பட்டுள்ளது. டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதிகள் 5 பேர், கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதிகள் 5 பேர் என 10 நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை அனுப்பியுள்ளது. இந்த நீதிபதிகள் குறித்து மத்திய உளவுத் துறை விசாரித்து கருத்து தெரிவித்தபின், அவற்றை பரிசீலித்த மத்திய அரசு இறுதியாக குடியரசுத் தலைவரின் கையெழுத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர் கையெழுத்திட்டதும் 10 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்படு வார்கள்.
இதுதவிர, அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்கப் பட்ட 35 பேரின் பெயர்களை மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இதில், 8 பேரது பரிந்துரை கடந்த ஜனவரியில் இருந்து நிலு வையில் இருந்து வருகிறது. இது தவிர டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கும்படி பரிந் துரைக்கப்பட்ட 8 பேரின் பட்டி யலை, மத்திய சட்டத்துறை உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்துள் ளது. நீதிபதிகள் நியமன விவகாரம் குறித்த வழக்கு வரும் 11-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை நீதித்துறைக்கும் மத்திய அரசுக்கும் இடையே இருந்துவந்த பதற்றத்தை தணிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.