

குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 123 இடங்களில் 107 இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது.
நாடு முழுவதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இதை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 16 மாவட்டங்களைச் சேர்ந்த நகராட்சி, பஞ்சாயத்து பதவியிடங்களுக்கு கடந்த ஞாயிற் றுக்கிழமை தேர்தல் நடை பெற்றது. ஒட்டுமொத்தமாக 123 பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 123 இடங்களில் 107 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு 16 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. 40 இடங்களை அந்த கட்சி இழந்துள்ளது.
பிரதமர் மோடி நன்றி
தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளி யிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அண்மையில் நடந்த சட்டப் பேரவை இடைத்தேர்தல், மகா ராஷ்டிரா, குஜராத் உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது, பாஜகவுக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியபோது, ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்கள் மத்திய அரசுக்கு முழுஆதரவு அளிக்கின்றனர். அதன் வெளிப்பாடு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தத் தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றது.