

கருப்பு பணத்துக்கு எதிரான பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பாலிவுட் திரையுலகினர், கிரிக்கெட் வீரர்கள் சிலர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் இருந்து, புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கரண் ஜோஹர், அஜய் தேவ்கன், நாகார்ஜூனா, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகினரும், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகிய விளையாட்டு வீரர்களும், மோடியின் நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளனர். அவர்களின் ட்வீட்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்துத் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் கரண் ஜோஹர், ''இது வெகுநிச்சயமாக பெரிய விளாசல்தான். நரேந்திர மோடி அவர்கள் தன்னுடைய பந்தை, அரங்கத்துக்கு வெளியே அடித்து சாதனை புரிந்திருக்கிறார்!'' என்றார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், ''நன்றி கரண்ஜோஹர், நாம் நம் வருங்கால சந்ததியினருக்காக ஊழல் இல்லாத இந்தியாவை நிச்சயம் உருவாக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் நாகார்ஜூனா, ''வரி கட்டும் எங்களுக்கு வெகுமதி அளித்துள்ளீர்கள். இந்தியா, தலைசிறந்த பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மோடி, ''நம்மைத் தாமதப்படுத்தும் கருப்புப் பணம், கள்ள நோட்டுகள், ஊழல் ஆகியவற்றை இந்த நடவடிக்கைகள் கட்டுப்படுத்தும்'' என்று கூறியுள்ளார்.
அதே போல, கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, ''நம்முடைய பிரதமரின் மிகப்பெரிய 'கூக்ளி' இது. சிறப்பான செயல். உங்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்'' என்று பதிவிட்டார். பதிலுக்கு மோடி, ''இது இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட செயல் இது'' என்று கூறியுள்ளார்.
ஹர்பஜன் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''கருப்புப் பணத்தை ஒழிக்க, ரூ. 500, 1000 நோட்டுக்களைப் பயன்படுத்துவதை நிறுத்திய நரேந்திர மோடி அவர்களின் செயல், மிகப்பெரிய சிக்ஸர். தைரியமான நடவடிக்கை இது'' என்று பாராட்டியுள்ளார்.