நாடு தழுவிய போராட்டத்தில் கவனம் ஈர்த்த 10 நிகழ்வுகள்

நாடு தழுவிய போராட்டத்தில் கவனம் ஈர்த்த 10 நிகழ்வுகள்
Updated on
2 min read

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டமும், இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் 12 மணி நேர பந்த்தும் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் கவனம் ஈர்த்த 10 நிகழ்வுகள்:

* டெல்லியின் ரெய்சினா சாலையில் இருந்து நாடாளுமன்றம் நோக்கி காங்கிரஸ் மாணவர் அணி சார்பில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. கடைசி நேரத்தில் தடுப்புகளை அமைத்து போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் டெல்லியின் மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கண்டன பேரணி நடத்தப்பட்டது. இதனால் டெல்லியின் பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* உத்தரப் பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அலகாபாத்தில் உள்ள பிரயாக் ரயில் நிலையம் முன்பாக பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவியை எரித்து சமாஜ்வாதியினர் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் சவுக் பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

* பிஹாரில் மும்பை-லோகமான்ய திலக், புதுடெல்லி-மால்டா டவுன், பாட்னா-ராஞ்சி ஜன்சதாப்தி, தர்பங்கா-புதுடெல்லி மற்றும் பெங்களூரு-ஜெய்நாகா சுவிதா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் அவதிப்பட்டனர்.

* வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் காங்கிரஸ் சார்பில் கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. 'திட்டமிடப்பட்ட திருட்டு', 'மறக்க முடியாத தவறான நிர்வாகம்' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி இப்பேரணி நடத்தப்பட்டது. திரிபுராவில் மத்திய அரசைக் கண்டித்து 12 மணி நேர பந்த் போராட்டம் நடைபெற்றது.

* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெங்களூருவில் பேரணி நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

* இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 12 மணி நேர பந்த் போராட்டம் அமைதியாக நடந்தது. மாநிலம் தழுவிய அளவில் நடந்த இந்தப் போராட்டத்தால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அடைக்கப்பட்டன. அரசு பேருந்துகள், ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது.

* மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் அழைப்பு விடுத்த 12 மணி நேர பந்த் போராட்டத்துக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை. எனினும் கல்லூரி சதுக்கம் முதல் எஸ்பெலனேட் வரை நடந்த கண்டன ஊர்வலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது அவர், "பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் மோடி உடனடியாக வாபஸ் பெறவேண்டும். இல்லாவிட்டால் அவரது வீடு முன்பாக அமர்ந்து ஒருநாள் நான் போராட்டம் நடத்துவேன்" என எச்சரிக்கை விடுத்தார்.

* மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் காங்கிரஸ் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடந்தது. ஜம்முவில் மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

* சமூக வலைத்தளங்களில் இந்தப் போராட்டங்களை ஆதரித்தும் கண்டித்தும் நெட்டிசன்கள் கடுமையான கருத்துகளுடன் பதிவுகளை வெளியிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in