

போபால் மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய சிமி தீவிரவாதிகள் 8 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரசியல் பழிவாங்கல் செயல் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிமி இயக்கத் தீவிரவாதிகள் 8 பேர் திங்கள்கிழமை காலை சிறை தலைமை காவலரை கொலை செய்துவிட்டு, 20 அடி உயர மதில் சுவரை தாண்டி தப்பிச் சென்றனர். அவர்களை எட்டு மணி நேரத்திற்குள் போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய தீவிரவாதிகள் 8 பேரும் ஒரே இடத்தில் சுற்றிவளைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என நாடு முழுவதும் கேள்வி எழுந்தது.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''இந்த மாதிரியான என்கவுன்ட்டர்கள், அரசியல் பழிவாங்கல்களின் பெயரிலேயே நடைபெறுகின்றன.
என்கவுன்ட்டர் என்று கூறப்படும் வாதத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களின் மனதில் எழுந்துள்ள ஏராளமான கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
இவை அனைத்துக்கும் அரசியல் பழிவாங்கல்களே காரணம். இதுபோன்ற சம்பவங்கள் தேசிய ஒருமைப்பாடு குறித்தும், ஒற்றுமை குறித்தும் கவலையை எழுப்புகின்றன'' என்று கூறியுள்ளார்.