

பாஜக எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் தங்கள் வங்கிக் கணக்கின் பரிவர்த்தனைகளை கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பின்னர், அதாவது நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையிலான காலக்கட்டத்தின் வங்கிப் பணப் பரிவர்த்தனை விவரங்களை முழுமையாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
கறுப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னுதாரணமாக பாஜக திகழ வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடி இத்தகைய அணுகுமுறையை கையாள்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐடி சட்டத்திருத்த மசோதா ஏன்?
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருமான வரி சட்ட (2-வது திருத்த) மசோதா 2016-ஐ நேற்று தாக்கல் செய்தார்.
அதன்படி, கறுப்புப் பணம் வைத்திருப்போரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 85 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல கறுப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவித்தால் 50 சதவீத வரி விதிக்கப்படும்.
இந்த சட்டத்திருத்த மசோதாவானது, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கான நடவடிக்கை அல்ல என்றும், ஏழை மக்களிடம் இருந்து சூறையாடப்பட்ட கறுப்புப் பணத்தை முறைப்படி மக்களின் நலனுக்கு பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட வழிமுறை என்றும் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
அமித் ஷா அறிவுரை
இந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் உள்ள வர்த்தகர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதாவது, ரொக்கப் பணமில்லா பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி, அதை வர்த்தகர்கள் நடைமுறைப்படுத்த வழிவகுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் தாள்களை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு தடை செய்து, புதிய 2,000, 500 தாள்களை அறிமுகப்படுத்தியது. கறுப்பு பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரமும், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உரிய பதில் சொல்லவும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது கவனிக்கத்தக்கது.