

கியூபாவின் புரட்சியாளரும் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு (90) இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு இன்று ஹவானாவுக்கு புறப்பட்டுச் செல்கிறது.
இந்தக் குழுவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இடம்பெற உள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் பிரதமர் அலுவலகம் ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இக்குழுவினர் டிசம்பர் 1-ம் தேதி நாடு திரும்ப உள்ளனர்.
கடந்த 1959-ம் ஆண்டு புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை அகற்றி ஆட்சியைக் கைப்பற்றி னார் காஸ்ட்ரோ. அதன் பிறகு அமெரிக்காவுக்கு சிம்ம சொப்ப னமாக விளங்கினார். உலகிலேயே அதிக காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2008-ல் அதிபர் பதவியிலிருந்து விலகினார்.
இதையடுத்து அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபரானார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் கடந்த 25-ம் தேதி இறந்தார். காஸ்ட்ரோவின் விருப்பப்படி (உயில்) அவரது உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் தலைநகர் ஹவானாவில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
அஞ்சலிக்குப் பிறகு நாளை முதல் 4 நாட்களுக்கு அவரது சாம்பல் 4 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். பின்னர் சான்டியாகோ டி கியூபா நகரில் டிசம்பர் 4-ம் தேதி காஸ்ட்ரோவின் சாம்பல் புதைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.