மணிப்பூரில் 300 ஏக்கர் தரிசு நிலம் 20 ஆண்டுகளில் வனப்பகுதியாக மாற்றம்: சென்னையில் படித்தவர் சாதனை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் , மலைப் பகுதியில் தரிசாக கிடந்த 300 ஏக்கர் நிலத்தை, கடந்த 20 ஆண்டுகளில் வனப் பகுதியாக மாற்றி சாதனை படைத்துள்ளார்.

மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தின் உரிபோக் கைதம் லேகாய் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மொய்ராங்தம் லோயா(47). சிறு வயது முதலே இவருக்கு இயற்கை மீது ஆர்வம் அதிகம். சென்னையில் கல்லூரி படிப்பை முடித்த இவர் கடந்த 2000-ம் ஆண்டில் மீண்டும் சொந்த ஊர் திரும்பி மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகேயுள்ள உள்ள கோப்ரூ மற்றும் லாங்கோல் மலைப் பகுதியில் மனிதர்கள் மரங்களை அதிகளவில் வெட்டி அழித்ததால், அது தரிசு நிலமாக காட்சியளித்தது. முன்பு இப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது.

இதைப் பார்த்து வேதனையடைந்த லோயா, கோப்ரூ மற்றும் லாங்கோல் மலைப் பகுதிகளை மீண்டும் வனப்பகுதியாக மாற்ற முடிவு செய்தார். அங்கு குடிசை அமைத்து 6 ஆண்டு காலம் தனியாக வசித்தார். மழை பெய்யும் காலத்தில் தரிசாக கிடந்த மலைப் பகுதியில் மூங்கில், தேக்கு, ஓக், பலா மர கன்றுகளை வாங்கி நட்டார். அந்த கன்றுகள் துளிர்விட்டு நன்றாக வளரத் தொடங்கின. இப்படி வாய்ப்பு கிடைக்கும் போதல்லாம் மரக் கன்றுகளை வாங்கி கோப்ரூ மற்றும் லாங்கோல் மலைப் பகுதியில் நட்டுள்ளார்.

இது தவிர இந்த மலைப் பகுதியில் மான்களும் சட்டவிரோதமாக வேட்டையாடப்பட்டு வந்தன. இதனால் இங்குள்ள வனவிலங்குகளை பாதுகாக்க ஒரு அமைப்பை உருவாக்கி வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரது முயற்சிக்கு மாநில வனத்துறை அதிகாரிகளும் உதவியாக இருந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளாக, லோயா மேற்கொண்ட முயற்சியில் கோப்ரூ மற்றும் லாங்கோல் மலைப் பகுதியில் 300 ஏக்கர் தரிசு நிலம் அடர்ந்த வனப்பகுதியாக மாறியுள்ளது என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள். இங்கு 100-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த மரங்கள் தற்போது உள்ளன. மூங்கிலில் மட்டும் 25 வகை இந்த வனப்பகுதியில் உள்ளன. மேலும் இந்த வனப்பகுதியில் குரைக்கும் மான்கள், முள்ளம் பன்றிகள், பாம்புகளும் அதிகளவில் தற்போது உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் தரிசு நிலமாக இருந்த மலைப் பகுதிகளை, அடர்ந்த வனமாக மாற்ற வேண்டும் என்ற பணியை வாழ்நாள் நோக்கமாக கொண்டு அதை நிறைவேற்றியுள்ளார் லோயா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in