இந்தியாவுக்கு தீங்கு இழைத்தோருக்கு தகுந்த பதிலடி கொடுத்தது ராணுவம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம்

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

சண்டிகர்: ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் நகரில் நிறுவப்பட்டுள்ள, மன்னர் பிரித்விராஜ் சவுகான் சிலையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

1,500 சட்டங்கள் ரத்து

உதாரணமாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் இல்லாத சுமார் 1,500 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லியில் உள்ள ராஜ பாதையின் பெயர் கர்தவ்யா பாத் (கடமை பாதை) என மாற்றப்பட்டுள்ளது. இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் கொடியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரித்விராஜ் சவுகான் சிலை நிறுவப்பட்டுள்ள இந்த மண் வீரத்துக்கு பெயர் பெற்றது. இப்பகுதியில் உள்ள நாட்டின் எல்லையை பாதுகாப்பதற்காக ஏராளமான வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

நாட்டு நலனை பாதுகாக்க பாஜக அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. இந்தியா பலவீனமாக இல்லை. இந்தியா அமைதியை விரும்புகிறது. அதேநேரம், இந்தியாவுக்கு தீங்கு இழைக்க முயற்சித்தவர்களுக்கு ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

உதாரணமாக, 2016-ல் காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது நமது ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது.

2019-ல் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம் மீது நமது விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது. லடாக்கின் கல்வான் எல்லை பகுதியில் அத்து மீறி நுழைய முயன்ற சீன ராணுவத்துக்கு நமது ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இவ்வாறு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in