

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின், தொழில் பாதிக்கப்பட்டதால் நாகப்பட்டினம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.
500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் விசைப்படகு மீனவர்களின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது. டீசல் வாங்க முடியாமலும், மீன்களை விற்பனை செய்ய முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை புதிய மீன் இறங்குதளத்தில் நாகை மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், நாகை அக்கரைப் பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், கல்லாறு, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமத்தினர் கலந்துகொண்டனர். 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்திருப்பதால் தங்களது தொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மீன்பிடித் தொழில் தடையின்றி நடைபெற பணப் புழக்கத்துக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும், அதுவரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைப்படகு மீனவர்களும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித் தனர். இதையடுத்து நேற்று முதல் விசைப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது.
மீனவர்கள் வேலைநிறுத்தத்தால் நாகை கடுவையாற்று துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகள்.