Published : 12 Nov 2022 05:53 AM
Last Updated : 12 Nov 2022 05:53 AM

வரும் 14 முதல் 16-ம் தேதி வரை ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பாலி தீவுக்கு பிரதமர் பயணம்

புதுடெல்லி: இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

சர்வதேச அளவில் நிதி, எரிபொருள் பயன்பாடு உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பு, உதவிகள் செய்யும் நோக்குடன் ஜி20 அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென் கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன

இந்த அமைப்பை சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடும் தலைமையேற்று வழிநடத்தும். அதன்படி தற்போது ஜி20 அமைப்புக்கு இந்தோனேசியா தலைமை வகிக்கிறது. இதையடுத்து ஜி20 அமைப்பின் 17-வது உச்சி மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா சார்பில் பிரதமர் மோடி ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். வரும் 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரையில் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பாலி தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.

ஜி20 மாநாட்டில் உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் ஆகிய 3 முக்கிய பிரிவுகளின் கீழ் உலக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். அத்துடன் ‘ஒன்றிணைந்து மீட்டல், வலிமையுடன் மீட்டல்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து சர்வதேச அளவில் உள்ள சிக்கல்கள், பிரச்சினைகள் குறித்து உலக தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

மாநாட்டின் நிறைவு நாளில் ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய பிரதமர் மோடியிடம், இந்தோனேசிய அதிபர் விடோடோ அதிகாரப்பூர்வமாக ஒப்படைப்பார். அதன்பின், வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20 அமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெறுவதால், ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிர் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x