

கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் ரூ.650 கோடி செலவில் இன்று பெங்களூரு அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும் பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி கர்நாடகாவில் கடந்த 2008-ம் ஆண்டு பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 30-க்கும் மேற்பட்ட சுரங்க மோசடி வழக்கில் சிக்கி கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சட்டத்துக்கு விரோதமாக சுரங்கம் அமைத்து ரூ.50 ஆயிரம் கோடி வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்திருப்பதாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. இவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணிக்கும் ஆந்திராவைச் சேர்ந்த சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனையில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இதற்காக திருப்பதியில் இருந்து 8 வேத விற்பன்னர்கள் வரவழைக் கப்பட்டுள்ளனர்.
மிகவும் ஆடம்பரமாக நடை பெறும் இந்த திருமணத்துக்காக ரூ.6 கோடி செலவில் எல்சிடி வடிவில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு, 30 ஆயிரம் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட் டுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள அரண்மனையில் நடைபெறும் இந்த திருமணத்துக்காக 36 ஏக்கர் பரப்பளவில் விஜயநகர பேரரசின் அரண்மனை போன்ற பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இதே போல திருப்பதி, ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள், பெல்லாரி ரெட்டி சகோதரர்களின் வீடு, பெல்லாரி கிராமம், தாமரை குளத்துடன் கூடிய கிராமிய விளையாட்டு மைதானம் போன்ற திரைப்பட பாணியிலான பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த செட்களை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பணியாற்றும் கலை இயக்குநர்கள் உருவாக்கி யுள்ளனர். இதேபோல பெரிய அளவிலான கேமராக்கள், எல்சிடி திரைகள், 3 ஆயிரம் தனியார் பாதுகாவலர்கள், என ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அமைச்சர்கள், திரையுலக முன்னணி கலைஞர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த திருமணத்துக்காக பெங்க ளூருவில் உள்ள நட்சத்திர விடுதி களில் 1500 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பெல்லாரி, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்து விருந்தினர்களை அழைத்துவர 700 ஆம்னி பேருந்துகள், 1000 டாக்ஸிகள், 15 ஹெலிபேடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கு கொண் டாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடிகர் நடிகைகளின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் காரணமாக பெங்களூரு அரண்மனை விழாக் கோலம் பூண்டுள்ளது.
வருமான வரித்துறையிடம் புகார்
பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வருமான வரித்துறையிடம் புகார் மனு அளித் துள்ளார். அதில் கூறப்பட்டிருப்ப தாவது;
சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த் தன ரெட்டியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. மேலும் 4 ஆண்டுகளாக அவர் எந்த தொழிலும் செய்யவில்லை. இத்தகைய இக்கட்டான நிலையில் ஜனார்த்தன ரெட்டியால் எப்படி ரூ.650 கோடியை புரட்ட முடிந்தது?
திருமணம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான பிறகும், வருமான வரித்துறை அதிகாரிகள் மவுனம் காப்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த திருமணத்தில் கறுப்புப் பணம் புழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த திருமணத்தை தீவிரமாக கண்காணித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.