

மாண்டியா: கர்நாடக மாநிலத்தின் நெல் களஞ்சியமான மாண்டியா மாவட்டத்தில் இப்போது பிரபலமாக உச்சரிக்கப்படும் பெயர் கீர்த்தனா. இவர் மாண்டியாவின் புதிய உதவி கமிஷனராக பொறுப்பேற்றுள்ளவர். அதற்காக அவர் கொண்டாடப்படாவில்லை. அவர் சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகில் நிறைய படங்களில் நடித்தவர் என்பதும் மக்கள் அவரை கொண்டாடிவருவதற்கு காரணம்.
குழந்தை நட்சத்திரமாக கன்னட திரையுலகின் ஜாம்பவான்களுடன் நடித்தது மட்டுமல்லாமல், கீர்த்தனா பல மாநில மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ளார். அவர் சுமார் 32 படங்கள் மற்றும் 48 தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக, கீர்த்தனா கன்னடத் திரைப்பட நடிகர்களான டாக்டர் விஷ்ணுவர்தன், அம்பரீஷ், சிவராஜ்குமார், ரமேஷ் அரவிந்த், சஷிகுமார், தேவராஜ் போன்ற பல நடிகர், நடிகைகளுடன் நடித்துள்ளார்.
வளர்ந்தபின் படிப்பில் கவனம் செலுத்திய கீர்த்தனா, தந்தையின் விருப்பப்படி போட்டித்தேர்வுகளில் பங்கேற்றார். நமது மாநிலத்தின் டிஎன்பிஎஸ்சி போல கர்நாடகாவின் கேஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 2011ல் அரசு அதிகாரியானார். பின்னர், யுபிஎஸ்சி என்னும் குடிமைப்பணி தேர்வுகளில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து அந்த தேர்வை எழுதிவந்தவர், தனது ஆறாவது முயற்சியில் 167வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரியானார். 2020 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான கீர்த்தனா, பயிற்சிகள் முடிந்து இப்போது மாண்டியாவின் உதவி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார். இதனால் மாவட்டத்தில் பிரபலமான அதிகாரியாக மாறியுள்ளார்.
மாண்டியாவின் உதவி ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக பேசிய கீர்த்தனா, "இதற்கு முன், நான் பிதார் மாவட்டத்தில் பயிற்சி பெற்றேன். பயிற்சி முடிந்ததும், நான் நேரடியாக மாண்டியா உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டேன். சிறப்பாகச் சேவை செய்ய மாண்டியா மக்களின் ஒத்துழைப்பு எனக்குத் தேவை, அவர்களின் ஒத்துழைப்பை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.