

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் நேற்று பணியைத் தொடங்கினார். அப்போது வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை (தானியங்கி) பின்பற்றுமாறு பதிவாளருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதன்படி திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் அடுத்த திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். இதேபோல வியாழன், வெள்ளிக்கிழமைகளில் பதிவு செய்யப்படும் மனுக்கள் அடுத்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும். இந்த முறையால் மனுக்களை பட்டியலிடுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். அவசர வழக்கு என்றால் தனியாக முறையிடலாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படி, மனுக்களை பதிவாளர் பரிசீலிப்பார். மனுக்களில் பிழை இல்லாத நிலையில் தலைமை நீதிபதியின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். அவர் மனுக்களை பரிசீலித்து குறிப்பிட்ட அமர்வில் பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடுவார். இந்த நடைமுறையில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல்செய்ய பதிவாளர் அலுவலகத்துக்கு அப்போதைய தலைமை நீதிபதி யு.யு லலித் உத்தரவிட்டார். இதன்படி கடந்த 5-ம் தேதி பதிவாளர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.