

மும்பை: மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, அங்கு ட்ரோன்கள், கிளைடர்கள், தனியார் ஹெலிகாப்டர்கள் பறப்பதற்கு மும்பை போலீஸ் ஒரு மாதம் தடை விதித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மும்பை போலீஸ் உத்தரவு: இதை தடுப்பதற்காக நவம்பர் 13-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரை ஒரு மாத காலத்துக்கு பிர்ஹன் மும்பை காவல் ஆணையர் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ட்ரோன்கள், ரிமோட் கன்ட்ரோல் மூலம் வானில் பறக்கவிடும் பொருட்கள், பாரா கிளைடர்கள், தனியார் ஹெலிகாப்டர்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிடுவதற்கு மும்பை போலீஸ் தடை விதித்துள்ளது.
இது குறித்து மும்பை போலீஸ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
144-வது பிரிவின்படி: போலீஸ் கண்காணிப்பு ட்ரோன்கள், துணை ஆணையர் அனுமதி பெற்று பறக்கவிடப்படும் ட்ரோன்கள் தவிர வானில் பறக்கவிடப்படும் தனியார் பொருட்களுக்கு அனுமதி இல்லை.
குற்றவியல் நடைமுறை சட்டம் 144-வது பிரிவின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவர். தீவிரவாதிகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், அவற்றை தடுப்பதற்காக, இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.