Published : 10 Nov 2022 03:45 PM
Last Updated : 10 Nov 2022 03:45 PM

குஜராத் தேர்தல் | ஆற்றில் குதித்து உயிர்களைக் காப்பாற்றிய ‘மோர்பி ஹீரோ’வுக்கு பாஜகவில் சீட்

கண்டிலாலா அம்ருதியா

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மோர்பி பால விபத்தின்போது ஆற்றில் குதித்து பல உயிர்களைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ கண்டிலாலா அம்ருதியாவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைகு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என்று மும்முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்தேர்தலில் போட்டியிடும் 160 வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெளியானது. அகமாதாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ் மற்றும் மாநில பாஜக தலைவர் சிஆர் பட்டீல் ஆகியோர் இணைந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.

மோர்பி ஹீரோவுக்கு சீட்: இந்தத் தேர்தலில், மோர்பி நகர் தொகுதியில் பாஜக முன்னாள் எம்எல்ஏ கண்டிலாலா அம்ருதியாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. மோர்பி நகரின் தற்போதைய எம்எல்ஏவும் கேபினட் அமைச்சருமான ப்ரிஜேஷ் மிஸ்ராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாஜக வட்டாரம் கூறுகையில், முதலில் தயார் செய்யப்பட்ட உத்தேசப் பட்டியலில் கண்டிலாலா பெயர் இடம்பெறவில்லை. ஆனால், அண்மையில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த மோர்பி நகர் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே கண்டிலாலா தன்னை மீட்புப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டார். ஆற்றில் குதித்து தத்தளித்தவர்களை கரை சேர்க்க அவர் உதவியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில்தான் குஜராத் மாநில பாஜக தலைவர்களுடன் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை நடத்தி வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும்போது கண்டிலாலாவுக்கு சீட் கொடுத்துள்ளனர் என்று தெரிகிறது.

கடந்த 2017 தேர்தலில் பாஜக 99 இடங்களையும் காங்கிரஸ் 77 இடங்களையும் பெற்றது. அதன் பிறகு கட்சித் தாவல், விலகல் போன்ற காரணங்களால் பாஜகவின் பலம் பேரவையில் 111-ஆக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று 6வது முறையாக ஆட்சியைப் பிடித்து சரித்திரம் படைக்க பாஜக முனைப்புடன் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x