Published : 10 Nov 2022 12:03 PM
Last Updated : 10 Nov 2022 12:03 PM

குஜராத் தேர்தல் | பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 160 பேர் - ஹர்திக் படேல், ஜடேஜா மனைவிக்கு சீட்

குஜராத் தேர்தல் | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி 160 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில், காங்கிரஸில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்த ஹர்திக் படேலுக்கு விரம்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் பூபேந்திர பட்டேலுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. அவர் கட்லோடியா தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மஜுரா தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். தற்போது பதவியில் இருப்போரில் 30 சதவீதம் பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று ஏற்கெனவே பாஜக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோர்பி ஹீரோவுக்கு சீட்: அதேபோல், அண்மையில் மோர்பிநகர் பால விபத்திற்குப் பின் ஆற்றில் குத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பாஜக முன்னாள் எம்எல்ஏ கன்டிலால் அம்ருதியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. மோர்பி தொகுதியிலேயே அவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோர்பி விபத்துக்குப் பின்னரே அவரது பெயர் பட்டியலில் இடம்பெற்று இப்போது அவர் வேட்பாளராகி இருக்கிறார் என்று குஜராத் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் எம்எல்ஏ கன்டிலால் அம்ருதியா

ஜடேஜா மனைவி போட்டி: முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் பட்டியலில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள ரிவாபா, 2016-ம் ஆண்டு முதல் பாஜகவில் இருந்து வருகிறார். இவர் வடக்கு ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

6வது முறை ஆட்சியை நோக்கி.. டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தல் முடிவு டிசம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்துவிட்ட பாஜக 6-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றினர்.

இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 160 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அகமாதாபாத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ் மற்றும் மாநில பாஜக தலைவர் சிஆர் பட்டீல் ஆகியோர் இணைந்து வேட்பாளர் பட்டியலை அறிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x