குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் | காங்கிரஸிலிருந்து அணி மாறியவர்கள் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம்

ஹர்திக் படேல்
ஹர்திக் படேல்
Updated on
1 min read

காந்திநகர்: குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு 16 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் இனத்தவருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வந்த ஹர்திக் படேல், அல்பேஸ் தாக்கோர் ஆகியோரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

அவர்கள் தற்போது பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் உள்பட கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு காங்கிரஸில் இருந்து விலகிய முக்கிய தலைவர்கள் 35 பேர் தற்போது பாஜகவில் உள்ளனர். இவர்களில் சிலர் தற்போது பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் உள்ளனர்.

பாஜக.வுக்கு நெருக்கடி: இவர்கள் அனைவருமே வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக டிக்கெட் கேட்டு பாஜக மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவருமே மக்கள் மத்தியிலும் பிரபலமாக உள்ளனர். எனவே அவர்களில் முக்கியமானவர்களுக்கு சீட் வழங்க பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in