இமாச்சலில் தயாராகும் கலை பொருட்களை ஜி20 தலைவர்களுக்கு பரிசளிக்கிறார் பிரதமர் மோடி
புதுடெல்லி: இந்தோனேசிய பாலி தீவில் ஜி20 மாநாடு வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலக நாடுகளின் தலைவர்களுக்கு, இமாச்சலில் தயாராகும் கலை, கைவினைப் பொருட்களை பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார். குறிப்பாக சம்பா கைக்குட்டை, கங்க்ரா மினியேச்சர் பெயின்ட்டிங், கின்னவுரி ஷால், குல்லு ஷால் மற்றும் கனால் பிராஸ் செட் உள் ளிட்டவற்றை பரிசளிக்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இமாச்சலில் 12-ம் தேதி பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தை உலகளவில் பிரபலப்படுத்தும் இந்த நடவடிக்கையால் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி20 அமைப்புக்கு டிசம்பர் 1-ம் தேதி இந்தியா தலைமை ஏற்க உள்ளது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருள், இலச்சினை மற்றும் இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
