

ஜார்க்கண்டில் தங்களிடம் உள்ள காலாவதியான 500, 1000 ரூபாய் கறுப்புப் பணத்தை மாற்றித் தரும்படி முதியோர் களை நக்சலைட்கள் வலுக் கட்டாயப்படுத்துவதாக தகவல் கள் வெளியாகியுள்ளன.
ஜார்க்கண்டில் உள்ள லத்திஹர் மாவட்டம் நக்சல்களின் புகலிடமாக உள்ளது. இங்குள்ள நக்சல்கள் மக்களை மிரட்டியும், வேறு குறுக்கு வழிகளிலும் கோடிக்கணக்கில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். மத்திய அரசின் அதிரடி முடிவால் பதுக்கல் பணம் அனைத்தும் செல்லாக் காசாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளதால், இதைப் பயன்படுத்தி நக்சல்கள் தங்களது பதுக்கல் பணத்தை வெள்ளையாக்க முயற்சித்து வருகின்றனர். இதற்காக லத்திஹர் மாவட்டத்தில் உள்ள முதியோர்கள் ஒவ்வொருவரை யும் மிரட்டி, அவர்களது வங்கிக் கணக்கில் கறுப்புப் பணத்தை செலுத்தி வெள்ளையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர். இந்தத் தகவலை லத்திஹர் மாவட்ட எஸ்பி அனூப் பிர்த்தரேவும் உறுதி செய்துள்ளார்.
சதித் திட்டம்
வங்கிக் கணக்கில் தங்களது பணத்தை டெபாசிட் செய்வதற்கு இளைஞர்களையும் நக்சல்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் பணம் மாற்றுவது தொடர்பாக, ஜார்க்கண்ட், பிஹார் மாநில நக்சல்கள் விரைவில் சந்தித்து திட்டம் தீட்டப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் நக்சல்கள் நடமாட்டத்தைக் கடந்த இரு தினங்களாக தீவிரமாக கண்காணித்து வருவதாக எஸ்பி அனூப் தெரிவித்தார்.