

புதுடெல்லி: நாட்டில் கல்வி, வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019-ல் நிறைவேற்றியது.
அப்போது இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன்தான் நிறைவேற்றப்பட்டது. அப்போது இந்தச் சட்டத்துக்கு திமுக, ஆர்ஜேடி, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தச் சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றுவது ஏன் என்றும் சில கட்சிகள் அப்போது கேள்வி எழுப்பின. இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி, விரிவாக விவாதம் நடத்திய பின்னரே நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. ஆனால் பெரும்பாலான கட்சிகள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவே பேசின என்பது நினைவிருக்கலாம்.
மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் அப்போது பேசும்போது, “இந்த ஒதுக்கீட்டிற்குள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினரில் வேலை கிடைக்காத ஒரு தலித் அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் இருக்கிறார். ஆனால் இந்த ஒதுக்கீட்டில் இருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். இது அரசியலமைப்புச் சிக்கலை ஏற்படுத்தும். இதற்கு நீங்கள் பதில் தரவேண்டும்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா பேசும்போது, “பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு பற்றி மத்திய அரசு பேசி வரும் நிலையில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு ஏற்கெனவே 49.5% இடஒதுக்கீடு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 50.5% திறந்த பிரிவினருக்கு உள்ளது. அந்த 50.5 சதவீதத்தில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரும் போட்டியிடலாம். அப்படியானால், நீங்கள் அந்த ஓபன் பிரிவிலிருந்து10 சதவீதத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது" என்றார்.
திமுக எம்.பி. கனிமொழி பேசும்போது, “பொருளாதார அளவுகோல் இடஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்திரா சாஹ்னி வழக்கில் தெளிவாகக் கூறியுள்ளது. இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் மதம் மற்றும் சாதியின் பெயரால் செய்யப்படும் வரலாற்றுத் தவறை சரி செய்ய வேண்டும் என்பதுதான். கருணையின் அடிப்படையில் இதைச் செய்யக்கூடாது” என்றார்.
நாடாளுமன்றத்தில் பல கட்சிகள் இந்தச் சட்டம் குறித்து கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பினாலும் அவர்களின் ஆதரவுடன்தான் சட்டம் நிறைவேற்றப்பட்டது. திரிணமூல், அதிமுக போன்ற கட்சிகளும் இந்தச் சட்டத்துக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்தன. இதே சட்டத்துக்கு மாநிலங்களவையில் மட்டுமே அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. மக்களவையில் உள்ள 23 கட்சிகளில் 18 கட்சிகள் இந்தச் சட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தன.
ஆர்ஜேடி, ஐயுஎம்எல், ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் மட்டுமே எதிர்த்தன. மேலும் ஆம் ஆத்மி, ஐஎன்எல்டி கட்சிகள் தங்களது நிலையை அப்போது தெளிவாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.