

புதுடெல்லி: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மிக மோசமாக காற்று மாசுபாடு நிலவும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் பிஹார் மாநிலத்தின் கதிஹார் முதல் இடத்தில் உள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாடு நடப்பு ஆண்டு மிகவும் மோசமடைந்துள்ளது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமடைந்தது. காற்று மாசுபாட்டிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் கடந்த வாரம் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டிருக்கும் பட்டியலின் அடிப்படையில், டெல்லியை விடவும் பிஹார் மாநிலத்தின் கதிஹாரின் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பது தெரியவந்துள்ளது.
நவம்பர் 7-ம் தேதி நிலவரப்படி, கதிஹாரின் காற்று தரக் குறியீடு 360 ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு 354 ஆகும்.
பிஹார் மாநிலத்தின் பெகுசராய் (339), சிவான் (331), ஹரியாணா மாநிலத்தின் பரிதாபாத் (335), கைதல் (307), குருகிராம் (305), உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டா (328), காசியாபாத் (304), மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் (312) ஆகிய நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.