Published : 08 Nov 2022 04:36 AM
Last Updated : 08 Nov 2022 04:36 AM

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

பத்து சதவீத இடஒதுக்கீடு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (இடமிருந்து) பேலா எம்.திரிவேதி, தினேஷ் மகேஸ்வரி, தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், ஜே.பி.பர்திவாலா.

புதுடெல்லி: பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோ ருக்கு (ஓபிசி) 27%, தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்சி) 15%, பழங்குடியினருக்கு (எஸ்.டி) 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103-வது அரசியலமைப்பு திருத்தத்தை மத்திய அரசு 2019-ல் நிறைவேற்றியது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் ஒரே வழக்காக விசாரிக்கப்பட்டன. 2020-ம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. பின்னர், அதே ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதன்படி, தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திரபட், தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

விசாரணையின்போது, இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கடந்த 1992-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மனுதாரர்கள் சுட்டிக் காட்டினர்.

இதற்கு மத்திய அரசு அளித்த விளக்கத்தில் "தற்போது பொதுப் பிரிவில் உள்ள, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கே 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எனவே, 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது" என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.8 லட்சம் என்ற வரையறையும் விசாரணையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மனுதாரர்கள் தரப்பு கூறும்போது, “நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் மாத வருமானம் ரூ.20,000-க்கும் குறைவாக உள்ளது. அப்படியிருக்கும்போது, மாதம் ரூ.66,000 ஊதியம் பெறும் குடும்பத்தை எந்த வகையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று கூற முடியும்" என கேள்வி எழுப்பினர்.

இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கும்போது, “இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) இடஒதுக்கீட்டின் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது. அந்த அடிப்படையில்தான், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான வருமான உச்சவரம்பும் நிர்ணயிப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த செப். 27-ல் நிறைவடைந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்று ஓய்வுபெறும் நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஐந்து நீதிபதிகள் அமர்வில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா எம்.திரிவேதி, ஜே.பி.பர்தி வாலா ஆகியோர், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

ஆனால், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். அவர்கள், அரசியலமைப்பின் 103-வது திருத்தம் செல்லாது என்று தெரிவித்தனர். எனினும், இறுதியில் தலைமை நீதிபதி யு.யு. லலித் கூறும்போது, "பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்" என்று தீர்ப்பளித்தார்.

பாஜக, காங்கிரஸ் வரவேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறும்போது, "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டு வந்தது. இதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். தற்போது, உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித் திருக்கிறது. அரசியலமைப்பு சாசனத்துக்கு உட்பட்டே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

பாஜக பொதுச் செயலாளர்கள் சி.டி.ரவி, சந்தோஷ், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உட்பட ஏராளமான பாஜக தலைவர்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “இந்த தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்கிறது. இதற்கான முயற்சி 2005-06-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அரசிலேயே மேற்கொள்ளப்பட்டது. 2014-ல் மசோதா தயார் செய்யப்பட்டது. ஆனால், மோடி அரசு 5 ஆண்டுகள் கழித்தே இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற் றியது" என்று தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் இடாலியா கூறும்போது, “10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி ஆதரவு அளித்தது. தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் பலனடைவர்" என்றார்.

திரிணமூல் காங். எம்.பி. சவுகதா ராய் கூறும்போது, “வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு மூலம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினர் முன்னேறுவர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x