வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம் ரூ.15,938 கோடி ரொக்கம் 10 டன் தங்கம் டெபாசிட்

திருமலை | கோப்புப்படம்
திருமலை | கோப்புப்படம்
Updated on
1 min read

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதுவரை ரூ.15,938 கோடியே 68 லட்சம் ரொக்கம், 10 டன் தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது.

உலகின் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தற்போது மாதந்தோறும் சராசரியாக ரூ.120 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. பணம் தவிர தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவற்றை வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்து வருகிறது.

இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுதலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கடந்த செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.5,358 கோடியே 11 லட்சம், யூனியன் வங்கியில் ரூ.1,694 கோடியே 25 லட்சம், பாங்க் ஆஃப் பரோடாவில் ரூ.1,839 கோடியே 36 லட்சம், எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.2,122 கோடியே 85 லட்சம், கனரா வங்கியில் ரூ.1,351 கோடி என 24 வங்கிகளில் திருப்பதி தேவஸ்தானம் உண்டியல் மூலம் வரும் பணத்தை டெபாசிட் செய்துள்ளது.

இதேபோன்று, பக்தர்கள் வழங்கும் தங்க நகைகளை உருக்கி, 24 காரட் தங்கமாக மாற்றி, பின்னர் அதனை அதிக வட்டி விகிதம் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்கிறது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி நிலவரப்படி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 9,819.38 கிலோ தங்கமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 438.99 கிலோ தங்கமும் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வட்டியாக தங்கத்தையே தேவஸ்தானம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in