ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு: இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழப்பு

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை அளிக்க மறுப்பு: இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி உயிரிழப்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுக்க‌ப்பட்டது. இதனால் தாயும் இரட்டை குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி க‌ஸ்தூரி (30), கர்நாடகாவின் துமகூருவில் உள்ள பாரதி நகரில் வ‌சித்து வந்தார். கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2-ம் தேதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதால் துமகூரு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் தாய் அட்டை, குடும்ப‌ அட்டை ஆகியவை கேட்கப்பட்டது. அந்த ஆவணங்கள் இல்லாததால் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டு, பெங்களூரு விக்டோரியா மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பெங்களூரு செல்வதற்கு பணம் இல்லாததால் கஸ்தூரி வலியுடன் வீடு திரும்பியுள்ளார். வியாழக்கிழமை அதிகாலையில் பிரசவவலி அதிகரித்த நிலையில் வீட்டிலேயே துடித்துள்ளார். அக்கம்பக்கத்தினரின் உதவியோடு அடுத்தடுத்து 2 ஆண் குழந்தைகளை பிரசவித்தார். அப்போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் கஸ்தூரி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இரட்டை பச்சிளம் குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

இதையடுத்து அவரது உறவினர்கள் துமகூரு அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர், மருத்துவமனை ஊழியர்களுக்கு எதிராக துமகூரு டவுன் போலீஸில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் குறித்து துமகூரு மாவட்ட சுகாதாரத் துறைஅலுவலர் மருத்துவர் மஞ்சுநாத்நேற்று விசாரணை நடத்தினார்.கர்ப்பிணிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியத்தோடு செயல்பட்டதாக மருத்துவர் உஷா, 3 செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

ஆதார் கட்டாயமில்லை: இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறும்போது, ‘‘மகப்பேறு பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு ஆதார் அட்டை, தாய் அட்டை ஆகியவை கட்டாயம் இல்லை. துமகூருவில் நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in