

நாளந்தா பல்கலைக்கழக வேந்தர் ஜார்ஜ் இயோ தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பல்கலைக்கழக தன்னாட்சி அதிகாரம் மீதான தாக்குதலே தனது ராஜினாமாவுக்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
பல்கலைக்கழக வருகைதரு பேராசிரியரும், குடியரசுத் தலை வருமான பிரணாப் முகர்ஜியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். நிர்வாக அதிகாரிகளிடம் கிடைக்கப்பெற்ற அந்தக் கடிதத்தில் இயோ கூறியிருப்பதாவது:
பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகதா போஸ், பிரிட்டனை சேர்ந்த பொருளாதார நிபுணர் லார்டு மெக்நாத் தேய் உள்ளிட்டோரை கொண்ட பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவை கலைப்பதற்கு நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஒப்புதல் அளித்தது மிகுந்த வியப்பை அளித்தது. இதற்கான நடவடிக்கையில் என்னை கலந்து ஆலோசிக்கவில்லை. நான் இந்தப் பொறுப்பை கடந்த ஆண்டு ஏற்கும் போது, பல்கலை.க்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கு விரோதமாக உள்ளது. எனவே மிகுந்த வருத்தத்துடன் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
பல்கலை. வேந்தராக கடந்த 2016 ஜூலையில் நான் நியமிக்கப்படும்போது, திருத்தப் பட்ட சட்டத்தின் கீழ் புதிய ஆட்சிமன்றக் குழு அமைக்கப் படும் என அரசு கூறியது.
சட்டத் திருத்தம் செய்வதற்கு முன் புதிய ஆட்சி மன்றக்குழு அமைக்கும் முடிவை இந்திய அரசு எடுத்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை.
நாளந்தா பல்கலை.யில் திடீரெனவும் ஒட்டுமொத்த மாகவும் நிர்வாக மாற்றம் ஏற்படும் தற்போதைய சூழ்நிலை, பல்கலை.யின் வளர்ச்சிக்கு இடையூறாகவே அமையும்” என்று கூறியுள்ளார்.
பிஹார் மாநிலத்தின் மையப்பகுதியில் நாளந்தா என்ற இடத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் நாளந்தா பல்கலை. தொடங்கப்பட்டது. புகழ்பெற்று விளங்கிய இப்பல்கலை. 1197-ல் துருக்கியரின் படையெடுப்பில் முற்றிலும் அழிக்கப்பட்டது.
நாளந்தாவை புதுப்பிக்கும் யோச னையை கடந்த 2005-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பரிந்துரை செய்தார். அதன் பின்னர் 2010 நவம்பர் 25-ம் தேதி இந்த பல்கலைக்கழகம் செயல்படத் தொடங் கியது. அமர்த்திய சென்-ஐ தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழக வேந்தராக நிய மிக்கப்பட்ட ஜார்ஜ் இயோ, சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஆவார்.