மசூத் அசாரைத் தடை செய்ய ஏன் இத்தனை தாமதம்?- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மீது இந்தியா சாடல்

மசூத் அசாரைத் தடை செய்ய ஏன் இத்தனை தாமதம்?- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மீது இந்தியா சாடல்
Updated on
1 min read

ஜெய்ஷ்-இ-மொகமது இயக்கத் தலைவர் மசூத் அசாரைத் தடை செய்ய ஏன் இவ்வளவு தயக்கமும் காலதாமதமும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் ஐ.நா.வின் இந்திய நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாத இயக்கங்கள் என்று தாங்களே அடையாளம் கண்டபோதிலும் அவற்றின் தலைவர்களைத் தடை செய்ய ஐ.நா. பல்வேறு விதமான உத்திகளைக் கையாண்டு காலதாமதம் செய்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

சமத்துவ பிரதிநிதித்துவம் மற்றும் பாதுகாப்பு ,கவுன்சில் உறுப்பினரை அதிகரித்தல் என்ற தலைப்பின் கீழான அமர்வில் சையத் அக்பருதீன் பேசும்போது கூறியதாவது:

“ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு இடத்தில் என்று தினசரி மட்டத்தில் பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் நாச வேலைகள் நமது கூட்டு மனசாட்சியை சிதைத்தாலும், தாங்களே பயங்கரவாத அமைப்புகள் என்று அடையாளப்படுத்திய அமைப்புகளின் தலைவர்களை தடை செய்ய ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் 9 மாதங்கள் எடுத்துக் கொண்டுள்ளது” என்றார்.

மசூத் அசாரைத் தடை செய்ய சீனா அனைத்து விதமான முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அக்பருதீன் பேசும்போது, “எப்போதும் பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டேதான் இருக்கிறது, ஆனால் நாம் தடைகளை உடைக்க முடியவில்லை. உலகத்தின் தற்போதைய (பயங்கரவாத) சூழ்நிலைக்கு எதிராக ஒரு அமைப்பு செயலிழந்து கிடப்பதிலிருந்து அதனை மீட்க வேண்டும்” என்றார்.

“சிரியா போன்ற மிக முக்கிய விவகாரங்களில், நெருக்கடிகளில் செயலின்மை, தெற்கு சூடானில் அமைதியைக் காப்பதில் நெருக்கடி, இந்த விவகாரங்களில் நாம் ஏற்றுக் கொண்ட, ஒப்புக் கொண்ட நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் தன்னுடைய காலத்தடை மற்றும் அரசியலில் முடங்கியுள்ளது .நம் காலத்தின் மிக முக்கியமான தேவைகளைக் கூட கருதாமல் முடங்கியுள்ள இதனை நாம் சீர்த்திருத்துவது அவசியம்.

ஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினர் அமைப்பில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. இது 70 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு, இப்போதும் அதன் அடிப்படையில் செயல்படுவது அதன் மீதான நம்பகமின்மையை அதிகரித்துள்ளது.

எனவே இந்த முடக்கத்தை உடைக்க சரியான தருணம் இதுவே” என்றார் சையத் அக்பருதீன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in