

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால் பொருளா தார ரீதியில் எதிர்க்கட்சிகளைக் காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார் என ஆளும் சமாஜ்வாதி குற்றம்சாட்டியுள்ளது.
லக்னோவில் நேற்று பேசிய ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மே நந்தா கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் தடையால் அதிக சிரமங்களைச் சந்தித்து வரும் பொதுமக்கள் பாஜகவை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் தண்டனை வழங்கி தக்க பாடம் புகட்டுவார்கள்.
இது கட்சிக்கு தற்கொலை செய்து கொள்வது போன்ற நடவடிக்கை என்பதை பாஜக அறியவில்லை. சொந்தப் பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் வரும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களித்து, அவர்களது நடவடிக்கையை நிச்ச யம் பாழாக்குவர். சமான்ய மனித னுக்கு தற்போது பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. எனவே தான் இந்த நடவடிக்கைக்கு சமாஜ்வாதி எதிர்ப்பு தெரிவிக்கிறது. நாடு முழுவதும் ஐந்தில், 4 கிராமங்களில் வங்கி வசதிகள் அறவே இல்லை. கிராம மக்கள் தங்களது பணத் தேவைக்கு பணக்காரர்களைத் தான் சார்ந்துள்ளனர். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் வேலை இழந்து பசியில் தவிக்கின்றனர்.
இத்தகைய பிரச்சினைகள் உருவாகும் என மத்திய அரசு முன்கூட்டியே யோசிக்கவில்லை. தினசரி விதிகளை மாற்றி வரும் போக்கு, மத்திய அரசு முன்கூட்டியே தயாராகவில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு நந்தா பேசினார்.