தடை கோரும் விவகாரம்: இ- ரிக்ஷா வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

தடை கோரும் விவகாரம்: இ- ரிக்ஷா வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

பேட்டரி மூலம் இயங்கும் இ – ரிக்ஷாக்களுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இ-ரிக்ஷாக்கள் எனப்படும் பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்லும் இந்த வாகனங்களில் ஐந்து பேர் வரை பயணம் செய்யலாம். குறைந்த தொலைவுக்கு தலா 10 ரூபாய் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் இயங்கும் ‘ஷேர் ஆட்டோ’க்கள் போல் இவை இயங்கி வருகின்றன. மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள இந்த வாகனங்களை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிபாஷ் கர்மார்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில் கூறியிருப்பதாவது:

டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பேட்டரி மூலம் இ-ரிக்ஷாக்கள் மற்றும் சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்கி வருகின்றன. இவை 800-1000 வாட் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. மணிக்கு 40 கி.மீ. மற்றும் அதை விட அதிக வேகத்தில் செல்கின்றன.

மத்திய மோட்டார் வாகனச் சட்டம், 1989 மற்றும் அதன் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின் படி, 200 வாட் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் 25 கி.மீ. வேகத்துக்கு குறைவாக செல்லும் வாகனங்கள் உரிமம் பெறத் தேவையில்லை. ஆனால், இ-ரிக்ஷாக்கள் குறிப்பிட்டுள்ள அளவை விட அதிக வேகம் செல்வதாலும் பேட்டரிகளைப் பயன்படுத்துவதாலும் அவை முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

இதுபற்றி போக்குவரத்து துறை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. இ-ரிக்ஷாக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை அதிக அளவில் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகின்றன. இந்த வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. இந்த வாகனங்கள் விபத்துக்குள்ளானால் யார் இழப்பீடு தருவது என்பதில் தெளிவான நிலை இல்லை. சட்ட விரோதமாக இயங்கும் இந்த வாகனங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் அடங்கிய அமர்வு, இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in