

கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது மகள் திருமணத்தை ஆடம்பர மாக நடத்த எங்கிருந்து வருமானம் வந்தது என விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு வைச் சேர்ந்த சமூக செயற்பாட் டாளர் ஹிரேமத் உச்ச நீதிமன்றத் தில் மனு ஒன்றை தாக்கல் செய் துள்ளார். அதில், “சுரங்க மோசடி வழக்கில் சிக்கிய முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. 50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 40 மாதங்களாக சிறையில் இருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மகளுக்கு ரூ.650 கோடி செலவில் ஆடம்பர திருமணம் செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித தொழிலிலும் ஈடுபடாமல், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவர் எப்படி செலவு செய்தார்? தன்னிடமிருந்த பழைய பணத்தை எந்த வங்கியில் வரிசையில் நின்று மாற்றினார். அவருக்கான வருமான வழிகள் என்ன? இது பற்றி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இதேபோல பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான நரசிம்ம மூர்த்தி, கர்நாடக வருமான வரித் துறை இயக்குநரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “சாதாரண பொதுமக்கள் 500 ரூபாய் பணத்தை மாற்ற வங்கிகளின் வாசலில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்திருக்கிறார். எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தமிழ் அமைப்பினர் கைது
மகளுக்கு ஆடம்பர திருமணம் செய்து வைத்த ஜனார்த்தன ரெட்டியை கண்டித்து கர்நாடக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் நேற்று பெங்களூருவில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் சி.ராசன் உள்ளிட்ட 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.