காற்று மாசு தீவிரம் | டெல்லியில் நாளை முதல் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - அரவிந்த் கேஜ்ரிவால்

டெல்லி காற்று மாசு
டெல்லி காற்று மாசு
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருவதால் அங்கு (நாளை) சனிக்கிழமை முதல் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் 5ம் வகுப்புக்கு மேல் படித்தும் மாணவர்களுக்கான வெளிப்புற செயல்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் கூறினார்.

தேசிய தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இரண்டு தினங்களாக காற்றின் தரக்குறியீடு 400 வரை எட்டி மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் வெள்ளிக்கிழமை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை விடப்படுகிறது. அதே போல் 5ம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு, பள்ளிக்கு வெளியே சென்று படித்தல் விளையாடுதல் போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது" என்றார்.

அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும், டெல்லியில் தனியார் வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பும் காற்றின் மாசு அதிகரிப்புக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன எண் அடிப்படையில் வாகனங்களை இயக்குவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்தும் டெல்லி அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசினை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை வரும் 10 ஆம் தேதி அவசர வழக்காக எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in