Published : 04 Nov 2022 11:30 AM
Last Updated : 04 Nov 2022 11:30 AM

குஜராத் தேர்தல் | ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? - இன்று அறிவிக்கிறார் கேஜ்ரிவால்  

கோப்புப்படம்

அகமதாபாத்: அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக கட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் முறையாக குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளது. இந்தநிலையில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது அந்த கட்சி கையாண்ட கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற மக்களிடம் கருத்துக் கேட்கும் அணுகுமுறையை குஜராத்திலும் தொடர்ந்தது.

இதற்காக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கடந்த சனிக்கிழமை(அக்.29) தேதி சூரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மூலமாக குஜராத் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆம் ஆத்மியின் குஜராத் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து குஜராத் மக்களே தீர்மானிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்

இதற்காக, 63570 00360 என்ற மொபைல் எண் கொடுக்கப்பட்டது. இந்த எண்ணைத் தொடர்பு கொண்டோ, வாட்ஸ்ஆப் மெசேஜ் மூலமோ, வாய்ஸ் மெசேஜ் மூலமோ மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம். அல்லது aapnocm@gmail.com என்ற இ-மெயில் மூலம் விருப்பத்தை தெரிவிக்கலாம். நவம்பர் மாதம் 3 ஆம் தேதி மாலை வரை மக்கள் இந்த கருத்து கேட்பில் பங்கேற்கலாம். மக்களின் கருத்துக்களுக்கு ஏற்ப வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்காக சில கட்சி தலைவர்களின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. பட்டியலில் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில தலைவர் கோபால் இதாலியா, தேசிய பொதுச்செயலாளர் இசுதன் காத்வி, பொதுச் செயலாளர் மனோஜ் சோராதியா உள்ளிட்டோர்களின் பெயர்கள் இருந்தன.

முன்னதாக, பஞ்சாப் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக யார் வர வேண்டும் என்பது குறித்து அக்கட்சி கருத்து கேட்பு நடத்தியது. இதில் பகவந்த் மானுக்கே அதிக வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தேர்தல் வெற்றியை அடுத்து அவர் முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 ம் தேதியுடன் முடிவடையும் குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை டிச.8ம் தேதி நடைபெற இருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு வரை பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டிகள் நடந்து வந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் 2022 ம் ஆண்டு தேர்தலில் மும்முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. புதிய முகமாக ஆம் ஆத்மி கட்சி இந்தாண்டு குஜராத்தில் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு கடந்த 2017 ல் நடந்த தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 5 முறை ஆட்சியில் இருந்துவிட்ட பாஜக 6-வது முறையாகவும் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x