கர்நாடகாவில் பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் கட்டாய‌ தியானம் - கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல்

கர்நாடகாவில் பள்ளிகளில் தினமும் 10 நிமிடம் கட்டாய‌ தியானம் - கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் தகவல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் தினமும் 10 நிமிடம் தியானம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு மாணவர்களால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. செல்போன், சமூக வலைதளங்கள், ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றுக்கு அடிமையாகியுள்ளனர். கவனச் சிதறல், படிப்பில் ஈடுபாடின்மை ஆகியவற்றால் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் விரக்தி, கோபம், ஆத்திரம் போன்ற மனநிலைக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை போக்க கல்வி நிபுணர்களிடம் கருத்தை அரசு கோரியிருந்தது.

இதனிடையே கர்நாடக மாநில தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கம், மாணவர்களை நல்வழிப்படுத்த தினமும் தியானம் செய்ய தூண்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தினமும் வகுப்பில் 10 நிமிடங்கள் தியானம் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்: இந்த தியான அமர்வை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தியானம் செய்தால் மாணவர்களின் மன நலம், உடல் ஆரோக்கியம், நற்சிந்தனை, மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் ஆகியவை மேம்படும். மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியும். இவ்வாறு பி.சி.நாகேஷ் தெரிவித்தார். முன்னதாக, கர்நாடக அரசு கடந்த டிசம்பரில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை பாடமாக சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in