

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சியில் 3 நாள்கள் நடைபெறவுள்ள “இந்திய நகர்ப்புற இயக்கம் மாநாடு (யுஎம்ஐ) மற்றும் கண்காட்சி 2022” இன்று தொடங்கவுள்ளது.
இந்த மாநாட்டினை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை (எச்யுஏ) அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்க உள்ளனர்.
இதுகுறித்து எச்யுஏ அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியா விடுதலை பெற்று 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை குறிக்கும் வகையில் இந்த நகர்ப்புற இயக்கம் மாநாடு மற்றும் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர்கள், போக்குவரத்து துறை தலைமை நிர்வாகிகள், சர்வதேச நிபுணர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த மூன்று நாள் நகர்ப்புற இயக்க மாநாட்டை மத்திய எச்யுஏ அமைச்சகமும், கேரள அரசும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
சர்வதேச அளவிலான சிறந்த போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் சமீபத்தில் அவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்களை நகரங்களுக்கு எடுத்துரைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். இவ்வாறு அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.