

கருத்து சுதந்திரத்துக்கான உண்மையான அர்த்தத்தை அண்டை நாடுகள் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
‘எக்ஸைல்’ (நாடு கடத்தல்) என்ற புத்தகத்தை தஸ்லிமா நஸ்ரின் எழுதியுள்ளார். அதில் வங்கதேசத்தில் இருந்து இந்தியா வந்ததும் 7 மாதங்கள் தொடர்ச்சியாக தான் சந்தித்த போராட்டங்கள், விரட்டியடிக்கப்பட்ட சம்பவங்கள், ஆத்திரத்துடன் கழித்த நாட்கள், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட துயரங்கள் என அனைத்து கசப்பான விஷயங்களையும் பதிவு செய்துள்ளார்.
மிரட்டல்கள், தடைகள், கட்டுப்பாடுகள் இருந்தாலும், மீண்டும் இந்தியா திரும்ப ஆசைப்படுவதாகவும், ஒரு நாள் சுதந்திரமான சிந்தனைக்கு இந்தியாவில் ஊக்கம் கிடைக் கும் என்ற நம்பிக்கை இருப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ‘‘இந்தியாவில் தான் நான் வாழ விரும்புகிறேன். மற்றவர்களுக்கு முரணாக இருந்தாலும் எனது கருத்து களை சுதந்திரமாக தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்றால் என்னவென்றே அறியாத அண்டை நாடுகள், இந்தியா விடம் இருந்து அதன் அர்த்தத்தை கற்றுக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.