

ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) தலைவர் அஜீத் சிங், ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர் சரத் யாதவ் ஆயோரை சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று டெல்லியில் தனித் தனியே சந்தித்து பேசினார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஜனதா பரிவார் கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பது தொடர்பாக முலாயம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.
முலாயம் சிங் யாதவ் வீட்டில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அவரது தம்பியும் ஜனதா பரிவார் கட்சிக் கூட்டணியில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருபவருமான ஷிவ்பால் யாதவும் உடனிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு முலாயம் லக்னோ புறப்பட்டுச் சென்றார். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் நேற்று டெல்லியில் இருந்தார்.
சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழா கடந்த 5-ம் தேதி லக்னோவில் நடைபெற்றது. இவ்விழாவில் இத்தலைவர்களும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவும் பங்கேற்றனர். ஜனதா பரிவார் கட்சிகள் இடையே ஒற்றுமை அவசியம் என ஷிவ்பால் யாதவ் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து இத்தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிக்கு மேற்கு உ.பி.யில் செல்வாக்கு உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு இம்மாநிலத்தில் குறைந்த ஆதரவே இருந்தாலும், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இங்கு ஆதரவை பெருக்கிக்கொள்ள அக்கட்சி முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உ.பி.யில் ஜனதா பரிவார் கட்சிகள் இடையே கூட்டணி என்பது, அக்கட்சிகளுக்கு முலாயம் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முன்வருகிறார் என்பதை பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.