

மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் சகோதரர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பல னின்றி இறந்தார். சிகிச்சை கட்டண மாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளில் அவரின் உறவினர்கள் செலுத்திய தொகையை மருத்துவ மனை நிர்வாகம் ஏற்க மறுத்ததால், வேறு வழியின்றி அமைச்சர் காசோலை மூலம் கட்டணத்தைச் செலுத்தினார்.
மத்திய திட்ட அமலாக்கம் மற்றும் புள்ளியியல் துறை இணை அமைச்சர் சதானந்த கவுடாவின் சகோதரர் பாஸ்கர் கவுடா (54) நுரையீரல் கோளாறு காரணமாக கடந்த மாதம் மங்களூருவில் உள்ள கஸ்தூரிபா மணிபால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிகிச்சைக்கு முன்பண மாக ரூ. 2.5 லட்சம் செலுத்தப்பட்ட நிலையில் பாஸ்கர் கவுடா நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத் துவமனை நிர்வாகம் மீதமுள்ள ரூ.48 ஆயிரத்தை செலுத்தி விட்டு சடலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறியது.
பாஸ்கர் கவுடாவின் உறவினர் கள் மீதமுள்ள சிகிச்சைக்கான கட்டணத்தை 500, 1000 ரூபாய் தாள்களாக மருத்துவமனையில் செலுத்தினர். ஆனால் மருத்துவ மனை நிர்வாகம் அந்த ரூபாய் தாள்களை வாங்க மறுத்துவிட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கர் கவுடாவின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்தை கண் டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மத்திய அமைச்சர் சதானந்தகவுடா, “மத்திய அரசின் உத்தரவுப்படி நவம்பர் 24-ம் தேதி (இன்று) வரை மருத்துவமனைகள் பழைய நோட்டுகளை சிகிச்சை கட்டணமாக பெற்றுக்கொள்ள வேண்டும்''என்றார். அதனை ஏற்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வழங்கிய விதிமுறைகளின்படி இந்த தொகையை ரொக்கமாக பெற்றுக் கொள்ள முடியாது. புதிய ரூபாய் நோட்டுகளாகவோ, காசோலை யாகவோ தான் பெற்றுக்கொள்ள முடியும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர்.
எனவே சதானந்த கவுடா வீட்டுக்குச் சென்று காசோலை கொண்டு வந்து 48 ஆயிரம் ரூபாயை செலுத்தினார். இதை யடுத்து பாஸ்கர் கவுடாவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் சதானந்தகவுடா கூறும்போது, “மத்திய அரசின் ரூபாய் நோட்டு அறிவிப்பால் நாட்டு மக்கள் படும் கஷ்டத்தை இப்போது நேரடியாக உணர்ந்தேன். அரசின் உத்தரவுகளைப் பெரும்பாலான மருத்துவமனைகள் ஏற்கவில்லை என்பதை கண்கூடாக பார்த்தேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
இதற்கிடையே பாஸ்கர் கவுடா வின் உறவினரும், மங்களூரு நகர பாஜக செயலாளருமான கிருஷ்ணா பாலேமர் மருத்துவமனை மீது போலீஸில் புகார் அளித்தார். மத் திய அரசின் உத்தரவை ஏற்க மறுத்த கஸ்தூரிபா மணிபால் மருத்துவமனை மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.