

புதுடெல்லி: குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதுகுறித்து காங்கிரஸ் கட்சி மூன்று குரங்குகள் இமோஜி மூலமாக தெரிவித்துள்ள கருத்துக்கு பாஜக எதிர்வினை ஆற்றியுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி வியாழக்கிழமை (நவ 3) நண்பகல் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த செய்தி வெளியாவதற்கு முன்னரே காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்ற மூன்று குரங்குகளின் இமோஜியை பதிவிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தக்கூடிய ஒரு தன்னிச்சையான அமைப்பு" என்று கெரிவித்திருந்தது.
காங்கிரஸின் இந்த கேலிக்கு பாஜக கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா "தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே, காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியை காப்பாற்றும் வேலையைத் தொடங்கி விட்டது" என்று தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சியின் ட்வீட்டை டேக் செய்துள்ள அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தோல்வி பயத்தில் தனது வழக்கமான பாணியை தொடங்கி உள்ளது. ஏனென்றால் ராகுல் காந்தி காப்பாற்றப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.