Published : 03 Nov 2022 11:16 AM
Last Updated : 03 Nov 2022 11:16 AM

உத்தரப் பிரதேசம் மதுரா நகர் ஹோட்டலில் தீ விபத்து: இருவர் உயிரிழப்பு

படம்: ஏஎன்ஐ

மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தின் விருந்தாவன் நகரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மதுரா - விருந்தாவன் சாலையில் உள்ள விருந்தாவன் கார்டன் என்ற தங்கும் விடுதி உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள சமையலறை பொருட்கள் வைக்கும் அறையில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் இரண்டு ஆம்புலன்ஸ், 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. இந்த விபத்தில் தங்கும் விடுதியில் வேலை செய்த ஊழியர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். படுகாயமைடைந்த ஒருவர் ஆக்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து மதுரா நகர தலைமை தீயணைப்பு அதிகாரி கூறுகையில்," இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது, அந்த ஹோட்டலின் முதல் தளத்தில் இருந்த பொருள்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அந்த தங்கும் விடுதியில் சுமார் 100 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார்.

தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பூதேவ் சிங் கூறுகையில் "தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மூச்சுத்திணறி, தீ காயங்களால் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது" என்றார். இறந்தவர்கள் தீ விபத்து ஏற்பட்ட விடுதியில் வேலை செய்த உமேஷ் (30), பிரி சிங் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் பிஜேந்திர சிங் ஆக்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

விபத்து ஏற்பட்ட தங்கும் விடுதி, தீயணைப்பு துறையிடமிருந்து தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) பெற்றிருக்கவில்லை என்றும் இதுகுறித்து தீயணைப்பு துறை சம்மந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x