

ராஞ்சி: பண மோசடி வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பங்கஜ் மிஸ்ரா, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், முதல்வர் ஹேமந்த் சோரனிடம் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது.
அதன்படி, ராஞ்சி நகரம் ஹினூ பகுதியில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை நண்பகலுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, முதல்வர் ஹேமந்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும், இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதருமாறு ஜார்க்கண்ட் போலீஸாரை அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்கஜ் மிஸ்ராவுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை, ராஞ்சியில் உள்ள பண மோசடி வழக்குகளை விசாரிக்கும் பிஎம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. சட்ட விரோதமான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.