மத்தியபிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாக 2 பேர் மீது பொதுமக்கள் தாக்குதல்

மத்தியபிரதேசத்தில் மாட்டிறைச்சி விற்றதாக 2 பேர் மீது பொதுமக்கள் தாக்குதல்
Updated on
1 min read

போபால்: மத்தியபிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நர்சிங் தாஸ் (50). இவரது நண்பர் ராம்நிவாஸ் மெஹர் (52). இவர்கள் இருவரும் பிலாஸ்பூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் ஒரு மூட்டையை எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது சுமித் நாயக் என்பவர் இவர்கள் மீது சந்தேகம் கொண்டு வழிமறித்து என்ன எடுத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த மூட்டையில் மாட்டிறைச்சி உள்ளது என்று நர்சிங் தாஸ் கூறியுள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்களை ஒன்று சேர்த்த சுமித் நாயக், நர்சிங் தாஸ், ராம் நிவாஸ் ஆகியோரை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் அவர்கள் 2 பேரின் ஆடைகளையும் அவிழ்த்து அரை நிர்வாணப்படுத்தினர். பின்னர் உள்ளாடைகளுடன் அவர்களை ஊர்வலமாக அழைத்து வந்துள்ளனர். மேலும் வரும் வழியில் பெல்ட்டால் 2 பேரையும் அடித்து உதைத்துள்ளனர். இந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

பின்னர் 2 பேரையும் சுமித் நாயக், போலீஸில் ஒப்படைத்து புகார் கொடுத்துள்ளார். அவர்களிடமிருந்த 33.5 கிலோ எடையுள்ள மாட்டிறைச்சியை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாட்டிறைச்சியை எடுத்து வந்தவர்களை அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in