

ரூ.500, ரூ.1000 நடவடிக்கை காரணமாக போதிய நிர்வாகமின்மையால் பணத்தை மாற்றுவதில் தேவையற்ற தாமதமும், ஏ.டி.எம்.கள் குறைந்த அளவில் இயங்குவதும் மக்களிடையே கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
மங்களூருவில் பணம் மாற்றுவதற்குரிய ஏற்பாடுகள் போதிய அளவில் இல்லாததால் மக்கள் வெறுப்படைந்து வருகின்றனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதில் கடும் தாமதங்களும், நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்ந்து வருவது ஒருபுறமிருக்க கர்நாடக மாநிலம் கடலோர மாவட்டங்களின் வர்த்தக மையமான ஊர்களில் வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்தே பணம் எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காரணம் பணம் இல்லை. வெள்ளிக்கிழமை காலை ஏ.டி.எம்.களில் பணம் இருக்கும் என்று அரசும், அதிகாரிகளும் தெரிவித்தாலும் கர்நாடகாவின் இப்பகுதிகளில் பணம் வந்து சேர்ந்தபாடில்லை, இதனால் மக்கள் கொதிப்படைந்து வருகின்றனர்.
மங்களூரு ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறும்போது, பணம் வரம்புக்குட்பட்ட அளவிலேயே நிரப்பப் பட்டுள்ளது, பணம் எடுப்பும் ரேஷன் படுத்தப்பட்டுள்ளது. பண்டேஸ்வர் தலைமைத் தபால் நிலையத்தில் நீண்ட கியூ இருந்து வரும் நிலையில் 12 மணியளவில் ரூ.5 லட்சம் மட்டுமே வந்துள்ளது. காங்கனாடியில் தபால் நிலையத்தில் இன்னும் எந்தப் பணமும் வந்தடையவில்லை.
எஸ்பிஐ வங்கியில் பணம் மாற்ற காத்திர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கணேஷ், காத்திருப்பு நீண்ட நேரமாகி வருகிறது என்றும் ஒரு நடுத்தர வர்க்க நபராக கள்ள நோட்டுகளை ஒழிக்கும் அரசின் முயற்சியை தான் ஆதரிப்பதாகவும் கூறினார், இருந்தாலும், “நான் சட்டரீதியாக சம்பாதித்த பணத்தை பயன்படுத்த நான் எவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் பணப் பரிமாற்றத்திற்காக தபால் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் லலித் குமார், மக்கள் பொறுமை இழக்கக் கூடாது, இது மிகப்பெரிய காரியம், எனவே அனைத்தும் சரியாக, இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்சம் கால அவகாசம் எடுக்கவே செய்யும் என்றார்.
தேசிய வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி கூறும்போது, ரூ.100 மற்றும் ரூ.50 ஏராளமாக உள்ளன. இதில் பிரச்சினையில்லை. ஏ.டிஎம்.களில் பணம் நிரப்பும் நிறுவனங்களினால்தான் இந்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.