

இந்தூர்-பாட்னா ரயில் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகளில் சிலருக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வழங்கிய நிவாரணத் தொகையில் பெரும்பாலும் காலா வதியான 500 ரூபாய் தாள்களே இருந்துள்ளன.
கடந்த ஞாயிறு அதிகாலைக்கு முன், சுமார் 142 பேரை பலிகொண்ட இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கப் பட்டவர்கள், கான்பூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் பலியானோரின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண உதவிகளைத் தவிர சில தனி நபர்களும், அமைப்புகளும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன.
மர்ம நபர்
இந்நிலையில், கான்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் பயணிகளுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தலா ரூ.5000 நிவாரண உதவியாக வழங்கியுள்ளார்.
அதில் பெரும்பாலும் அண்மையில் காலாவதியான 500 ரூபாய் தாள்களே இருந்துள்ளன. கடந்த 8-ம் தேதி முதல் செல்லாது என அறிவிக்கப்பட்ட பத்து 500 ரூபாய் தாள்களை தங்களின் உறவினர் வாயிலாக ஒருவர் வழங்கிவிட்டுச் சென்றதாக, பயணிகள் ஆஷா மிஷ்ரா மற்றும் அனில் ஆகியோர் தெரிவித்தனர்.
காலாவதியான ரூபாய் தாள்களை ரயில்வே அதிகாரிகள் வழங்கியதாக அந்த உறவினரிடம் மர்ம நபர் தெரிவித்துள்ளார். ஆனால், அத்தொகை ரயில்வே துறையால் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.
இதுகுறித்து பாஜக பிரமுகர் ஆர்.பி.சிங் கூறும்போது, ‘யாரேனும் அரசியல்வாதிகள் அல்லது, ரயில்வே அதிகாரிகள் பதுக்கப்பட்ட பணத்தை இவ் வாறு விநியோகித்திருக்க வாய்ப் புள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சரிடம் உடனடியாக தகவல் தெரிவித்துவிட்டோம்’ என்றார்.
காலாவதியான ரூபாய் தாள்கள் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் விநியோகிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என, கான்பூர் மண்டல போலீஸ் கமிஷனர் இப்திகாருதின் தெரிவித்தார்.