Last Updated : 01 Nov, 2022 05:31 AM

 

Published : 01 Nov 2022 05:31 AM
Last Updated : 01 Nov 2022 05:31 AM

மதரஸாக்களை நவீனப்படுத்தும் உ.பி. அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு

புதுடெல்லி: பாஜக ஆளும் உ.பி.யிலுள்ள ஆயிரக்கணக்கான மதரஸாக்களில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் கள ஆய்வு நடந்து வருகிறது. இதில் இதுவரை அரசு அங்கீகாரம் பெற்ற மதரஸாக்கள் 16,500 எனவும் அங்கீகாரம் பெறாதவை 7,500 எனவும் தெரிய வந்துள்ளது. மதரஸாக்களில் பல்வேறு வகை குறைபாடுகள் இருப்பதும் களஆய்வில் தெரியவந்தது.

அக்குறைகளை நிவர்த்தி செய்வதுடன், மதரஸாக்களை நவீனப்படுத்தவும் உ.பி. அரசு தயாராகி வருகிறது. சுமார் 8 ஆண்டுகளுக்கு முன் மதரஸாக்களை நவீனப்படுத்த, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு கூட்டத்தில் பேசிய மோடி, “முஸ்லிம்களின் ஒரு கையில் புனித குர் ஆனும், மறுகையில் லேப்டாப் கம்ப்யூட்டரும் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கள ஆய்வுக்கு முஸ்லிம் அமைப்புகள், எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் உ.பி.யின் தியோபந்த் நகரில் உள்ள பழம்பெரும் தாரூல் உலூம் மதரஸாவின் நிர்வாகிகள் கள ஆய்வை வரவேற்றனர்.

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தை தாரூல் உலூம் நேற்று முன்தினம் நடத்தியது. இதில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 4,500 மதரஸாக்களின் மவுலானாக்கள் கலந்து கொண்டனர். இதன் முடிவில், “உ.பி. அரசு முயற்சிக்கும் மதரஸாக்கள் நவீனமயமாக்கல் தேவை இல்லை” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாரூல் உலூம் மதரஸா துணை வேந்தர் மவுலானா முப்தி அபுல் காசிம்நொமானி கூறுகையில், “சில அறியாதவர்களால் மதரஸாக்களின் அடிப்படைக் கல்வியில் மாற்றம்கொண்டுவர பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால், மதரஸாக்கள் தொடங்கப்பட்டதன் நோக்கம் திசை மாறி விடும். எனவே, தற்போதுள்ள காலத்து கல்வியே இருக்க வேண்டும்” என்றார்.

உ.பி. முஸ்லிம்கள் பலர் தங்கள் குழந்தைகளை பொதுக்கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்கு முன், மதரஸாக்களில் சேர்த்து குர்ஆனை படிக்க வைக்கின்றனர். இந்த மதரஸாக்களில் அளிக்கப்படும் குறிப்பிட்ட பட்டங்களுக்கு ஏற்ற வகையில் அந்த மாணவர்கள், உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் மற்றும் பல தனியார் கல்வி நிலையங்களில் சேர்ந்து உயர்க்கல்வி பெறும் வசதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x