

திருப்பதியில் நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கன்னியாகுமரியில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயில் நிறைவடையும் நிலையில் உள்ளது. கருவறைக்குள் நிர்மாணிக்கப்படும் மூலவரின் மீது சூரிய ஒளி படும் வகையில் இக்கோயில் அமையவுள்ளது.
பக்தர்களுக்கு தங்கும் விடுதி
சென்னையில் இருந்து பாத யாத் திரையாக திருமலைக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக தமிழக, ஆந்திர எல்லையில் சித்தூர் மாவட் டம் நாராயணவனம் அருகே சுமார் 3 ஏக்கரில் தங்கும் விடுதி கட்டப்படும்.
இரவு 11 மணிக்கு மேல் திருப்பதியில் இருந்து திரு மலைக்குச் செல்லும் வாகனங்கள் அலிபிரியில் தடுத்து நிறுத்தப் பட்டு, அதிகாலை 3 மணிக்கு மலை பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகிறது. இதனால் சுப்ரபாத சேவைக்குச் செல்லும் பக்தர்களுக்குச் சிரமம் ஏற்படு கிறது. இதை தவிர்க்க விரைவில் 24 மணி நேரமும் திருப்பதி, திரு மலை இடையே வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.
திருச்சானூர் பத்மாவதி தாயாரைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. இதைக் கருத்தில் கொண்டு திருச்சானூரிலும் விரைவில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்பணம் தேவையில்லை
திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகளுக்காக முன் பணம் செலுத்தும் முறை அமலில் இருந்தது. தரிசனம் முடிந்ததும் அவசரமாக ஊர் திரும்பும் பக்தர்கள், முன்பணத்தைப் பெறு வதற்கு அங்குமிங்கும் அலைய வேண்டி இருந்ததால், ரயில், பேருந்து ஆகியவற்றை குறித்த நேரத்தில் பிடிக்க முடியாமல் போனதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து தங்கும் அறைகளுக்காக முன்பணம் செலுத்தும் முறையை தேவஸ் தானம் அதிரடியாக ரத்து செய்துள் ளது. இந்த தகவலை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் உறுதிப்படுத்தினார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இதற்கிடையில் போபாலில் நேற்று சிமி தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து திருமலை, திருச்சானூர், ஸ்ரீகாளஹஸ்தி கோயில்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.