

ஜம்முவின் நக்ரோடாவில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாக, 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழ் செய்தியாளரிடம் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நக்ரோடா ராணுவ முகாம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணியளவில் தீவிரவாதிகள் புகுந்தனர். பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ராணுவமும் பதிலடி தந்தது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ தரப்பில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர்.
ராணுவத்தின் தலைமை முகாம்களில் ஒன்றான நக்ரோடாவில் தாக்குதல் நடந்ததை அடுத்து, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை உடனடியாக மூடப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நக்ரோடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இது குறித்து ஜம்முவின் துணை கமிஷனர் சிம்ரந்தீப் சிங் கூறும்போது, "தீவிரவாத தாக்குதலில் எதிரொலியாக, நக்ரோடாவில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை உடனடியாக மூடுமாறு உத்தரவிட்டோம்" என்றார்.
மேலும், ஜம்மு நகர் முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.