Published : 31 Oct 2022 08:30 AM
Last Updated : 31 Oct 2022 08:30 AM

போட்டியே இல்லாத வர்த்தகம்.. 14 நாடுகள் வாங்க ஆர்வம் - ‘பிரம்மோஸ்’ ஏற்றுமதியால் ரூ.41,000 கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு

சென்னை: உலகில் எந்த நாட்டிலும் பிரம்மோஸ் போன்ற ஏவுகணை இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளதால், சுமார் ரூ.41 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இந்த நாடுகளை எதிர்கொள்ள, உலக அரங்கில் இந்தியா ராணுவ பலம்மிக்க நாடாக வளர வேண்டியது அவசியமாக உள்ளது. இந்தசூழலில், தற்கால போர் உத்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாட்டின் பாதுகாப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா உருவாக்கியது. இதைஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில், வருவாய் ஈட்டும் தொழிலாகவும் மாறியுள்ளது.

இதுதொடர்பாக பிரம்மோஸ் விஞ்ஞானி ஆ.சிவதாணு பிள்ளையை நேரில் சந்தித்து, ‘இந்து தமிழ் திசை’ சார்பில் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

பிரம்மோஸ் ஏவுகணையின் சிறப்பு என்ன?

கண்டம் விட்டு கண்டம் பாயும்அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் நம்மிடம் உள்ளன. இவை அதிக உயரத்தில் பறப்பதால் ரேடார், செயற்கைக் கோள் போன்றவை மூலம் அதன் நகர்வை எதிரி நாடுகள் கண்காணிக்க முடியும். தாழ்வான உயரத்தில் சென்று, எதிரிகளின் நிலைகளை தாக்கி அழிக்கும் வகையில் பிரம்மோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் பாயும் சூப்பர்சானிக் ஏவுகணை. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ளதைவிட 9 மடங்கு அதிகவேகம் கொண்டது. இதுபோன்ற ஏவுகணை வேறு எந்த நாட்டிலும் இல்லை. இது இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. எதிரிகளை தாக்க இந்தியா பயன்படுத்தும் முதல்ஆயுதமாக இது இருக்கிறது. இதை நாம் அதிக அளவில்தயாரித்துள்ளோம். அடுத்தகட்ட மாக, இதன் வேகத்தை கூட்டுவது, எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாத வகையில் தாக்குவது போன்ற அம்சங்களை மேம்படுத்தும் பணிகளும் முடிந்துள்ளன.

ஏற்றுமதி வாய்ப்புகள் எப்படி வந்தன?

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இத்தகைய ஏவுகணையைஎங்களுக்கு தரலாமே என உலகநாடுகள் இந்தியாவை நாடின. இதன்மூலம் பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்றுமதி செய்யும்வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிறநாடுகளும் ஏவுகணையை வாங்கஆர்வம் காட்டுகின்றன.

‘‘உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவுக்கு வருவாய் வருவது ஒரு பக்கம்இருந்தாலும், உலக அரங்கில்இந்தியா மீதான மதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்குமேக் இன் இந்தியா, ஆத்மநிர்பர் பாரத் மட்டுமல்லாது, உலகம்முழுமைக்கும் பொருட்களை உற்பத்தி செய்வதுதான் இந்தியாவின் இன்றைய முழக்கமாக உள்ளது’’ என்று பல இடங்களில் பிரதமர் மோடி கூறிவருகிறார். அவரது வழிகாட்டுதல்படி, பல நாடுகளுக்கும் பிரம்மோஸ் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

ஏவுகணையை மேம்படுத்தும் திட்டம் உள்ளதா?

அடுத்த தலைமுறை (New Generation) பிரம்மோஸ், ஹைப்பர்சானிக் பிரம்மோஸ் உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது ஒலியைவிட 7 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. தற்போதைய பிரம்மோஸ் 3 டன் எடை கொண்டது. அதை 1.5 டன்னாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம், விமானத்தில் அதிக எண்ணிக்கையில் கொண்டு செல்லமுடியும்.

ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்துஇப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக அரங்கில் போர் உத்திகள் மாற மாற, பிரம்மோஸ் ஏற்றுமதி அதிகரிக்கும்.

இதன் ஏற்றுமதியால் எவ்வளவு வருவாய் கிடைக்கும்?

ரஷ்யாவுடன் இணைந்து தலா150 மில்லியன் டாலர் என மொத்தம் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்த ஏவுகணை திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், 7 பில்லியன் டாலர் வர்த்தகம்செய்யப்பட்டுள்ளது. பிரம்மோஸ் போன்ற ஏவுகணை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. போட்டியே இல்லாத வர்த்தகம் என்பதால் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம். இதை வாங்க 14 நாடுகள் ஆர்வமாக உள்ளன. அப்போது ஏற்றுமதி5 பில்லியன் டாலரை (சுமார் ரூ.41 ஆயிரம் கோடி) தாண்டிவிடும்.

ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு, ஒரு குறிப்பிட்ட நாடு எப்படி தேர்வு செய்யப்படுகிறது?

ஏற்றுமதி வாய்ப்பு இருந்தாலும், இது ஓர் ஆயுதம். புவி அரசியல் சூழல், ஒரு நாட்டுக்கு விற்றால் நமக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமா, அந்த நாடு எந்த நோக்கத்துக்காக பிரம்மோஸை பயன்படுத்தும் என பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்த பிறகே, ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்படும்.

பிரம்மோஸ் ஏவுகணை தயாரிப்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பங்கு குறித்து..

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) தலைமை பொறுப்பிலும் அப்துல் கலாம் இருந்தபோதுதான், பிரம்மோஸ் தயாரிப்புக்காக இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அவரது ஆலோசனையை கேட்கக்கூடிய அரசாகவும் அன்றைய அரசு இருந்தது. அன்று பிரதமராக இருந்த நரசிம்மராவிடம் கலாமும், நானும் சேர்ந்துதான் பிரம்மோஸ் திட்டம் குறித்துவிவரித்தோம்.

கலாம் புது சிந்தனையை ஆதரிப்பவர், தொலைநோக்கு பார்வையாளர். அதனால் இதெல்லாம் சாத்தியமானது. இந்த ஏவுகணை கடந்த 2001-ல் பரிசோதிக்கப்பட்டது.

பாதுகாப்புத் துறையில் தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து?

தொழில் துறையில் முக்கிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்குரிய கல்வித் திறன் மேம்பாடு தேவை. நாம் கல்வி முறையை மாற்றி, திறன் மிக்க மாணவர்களை கொடுத்தால்தான் தொழில் துறை மேம்படும். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட துறை சார்ந்த அறிவு கொண்டவர்களே பணிக்கு வருகின்றனர். இங்கு இந்தியாவில் பி.இ. படித்தாலும் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துவிட்டு, பிறகு அத்துறை குறித்து படிக்கிறோம். மாணவருக்கு ஒரு துறையில் ஆர்வம் இருந்தால் அதை மட்டுமே படிக்க அனுமதிக்க வேண்டும். எல்லா பாடங்களையும் படிக்கஅறிவுறுத்தக்கூடாது. பள்ளியைவிட்டு விலகிதான் ராமானுஜன், ஐன்ஸ்டீன் போன்றோர் சிறந்த மேதைகளாக உயர்ந்துள்ளனர் என்பதை உணர வேண்டும்.

விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் வளர்ச்சி பெற்று வருகிறது. பாதுகாப்பு தொழில்நுட்ப வழித்தடம்திட்டத்தில் உத்தர பிரதேசம், தமிழகத்தை மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வாய்ப்பை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்பதமிழகத்தில் இளைஞர் வளத்தை உருவாக்க வேண்டும்.

பிரம்மோஸ் உருவாக்கத்தின்போது எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

‘நாங்கள் தொழில்நுட்பத்தை வழங்க மாட்டோம். இந்தியா ஏவுகணை தயாரிக்க கூடாது’ என்று ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பு (Missile Technology Control Regime) கட்டுப்பாடு விதித்தது.

ஆனால் நாங்கள் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இணைந்து தேசிய இயக்கமாக ஏவுகணை திட்டத்தை கொண்டு வந்து, சுமார் 200 சிக்கலான தொழில்நுட்பங்களை கொண்டு, உலக நாடுகள் எத்தனை தடை போட்டாலும், அதைமுறியடிக்கும் சக்தியை உண்டாக்கிவிட்டோம். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. உலகில் இந்தியாவும் நம்பர் ஒன் நாடுதான் என்பது, பிரம்மோஸ் மூலம் நிரூபிக்கப்பட்டது.

பிரம்மோஸ் மூலம் உலக அரங்கில் இந்தியா எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது?

பொருளாதாரத்தில் மேம்பட்டு வருகிறோம், ராணுவ பலம் வந்துவிட்டது, அணு ஆயுத பரிசோதனை செய்துவிட்டோம் என்பதால் இந்தியா முக்கியமான நாடு என உலக நாடுகள் கருதுகின்றன.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடுஇந்தியா. இங்கு மொழி,கலாச்சாரம், அரசியல் போன்றவற்றில் வேற்றுமைகள் இருந்தாலும், அணுசக்தி, ஏவுகணைசக்தி, பொருளாதார சக்தி போன்றவற்றில் முன்னேறி, பெரிய நாடு என்பதை நாம் நிரூபித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x