

மோர்பி: குஜராத்தின் மோர்பி நகர் கேபிள் பாலம் விபத்தில் பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலம், புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. குஜராத்தி புதுவருடப் பிறப்பை ஒட்டி பாலம் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது அறுந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். அவர்களில் சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.
இதில், 68 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். இவர்களில் பலர் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவ இடத்தில் இருந்து நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். அவருடன் மாநில அமைச்சர்களும் அங்கேயே தங்கியுள்ளனர். பிரதமர் மோடி குஜராத்தில் இருப்பதால் விடிவதற்குள் மீட்புப்பணிகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையும், இந்திய ராணுவமும், விமானப்படையும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன.