

‘‘உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், மாவோயிஸ்டுகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்படும்’’ என்று சட்டீஸ்கர் மாநில போலீஸார் கூறியுள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஸ்தார் பகுதியில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நாட்டில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளதால், மாவோயிஸ்டுகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பஸ்தார் பகுதியில் மட்டும் ‘மாவோயிஸ்டுகள் ரூ.7000 கோடி அளவுக்கு பதுக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இனிமேல் அந்தப் பணத்தை அவர்களால் பயன்படுத்த முடியாது. எனவே, அவர்களுடைய நடவடிக்கைகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும், வங்கிகள், நிதிநிறுவனங்கள், தபால் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், ஏடிஎம்.களில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி பணத்தைக் கொள்ளை அடிக்க வாய்ப்புள்ளது என்று போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கெல்லாம் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று சிறப்பு டிஜிபி (மாவோயிஸ்டுகள் தடுப்பு நடவடிக்கை) டி.எம்.அவாஸ்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘மிரட்டி பணம் பறித்தல், வலுகட்டாய வசூல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கில் மாவோயிஸ்டுகள் பணத்தைப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தை காடுகளில் பதுக்கி வைத்துள்ளனர். அதைத் தங்கள் கூட்டாளிகள், ஆதரவாளர்கள் மூலம் வங்கிகளில் செலுத்த முயற்சிக்கலாம். எனவே, பஸ்தார் பகுதியில் உள்ளவர்கள் வங்கிகளில் எவ்வளவு செலுத்துகின்றனர் என்று தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாவோயிஸ்டுகள் தங்களிடம் உள்ள பணத்தை வேறு யார் மூலமும் மாற்றுவதற்கோ அல்லது உள்ளூர் மக்கள் மூலம் வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கோ விடமாட்டோம்’’ என்றார்.
இதற்கிடையில் நக்ஸல் பாதிப்புள்ள கொண்டாகாவோன் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.44.25 லட்சம், (ரூ.500, ரூ.1000 நோட்டுகள்), ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நக்ஸல் பாதித்த பகுதியில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வரு கின்றனர்.